பணியாளர்களின் விடுமுறையை அதிகரித்து லாபம் ஈட்டிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

Nov 07, 2019 10:42 AM 106

உலகெங்கும் உள்ள நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரித்துவரும் சூழலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது பணியாளர்களின் விடுமுறையை அதிகரித்து லாபம் கண்டுள்ளது.

உலகில் மிக அதிக நேரம் பணியாற்றும் மக்களாக ஜப்பான் மக்கள் உள்ளனர். கடந்த 2017ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 25 சதவிகித ஜப்பானியர்கள் தங்கள் வேலை நேரம் தவிர மாதம் 80 மணி நேரம் அளவுக்கு அலுவலகத்திற்காகக் கூடுதல் நேரம் ஒதுக்குவது தெரியவந்தது. இதனால் அவர்களின் வேலைத்திறன், செயலூக்கம் ஆகியவை பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்பட்டது.

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்டின் ஜப்பான் கிளையானது, ஒரு பரிசோதனையாக கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் தங்கள் 2,300 ஊழியர்களுக்கு, வாரத்திற்கு 7 நாட்களும் ஊதியம் தந்து, 3 நாட்கள் விடுமுறை கொடுத்தது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது.

அதோடு, ஊழியர்களுக்கான எந்த மீட்டிங்குகளும் 30 நிமிடங்களுக்கு மேல் தொடரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. நேரடியாக சந்திப்பதைவிடவும், ஆன்லைனில் கலந்துரையாடுவது பரிந்துரைக்கப்பட்டது. இது Work Life Choice Challenge Summer 2019 என்று அழைக்கப்பட்டது.

இந்த செயல்பாடுகளால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஜப்பான் கிளையின் உற்பத்தித்திறன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 39.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. அதோடு, முந்தைய ஆண்டின் ஆகஸ்டு மாதத்தோடு ஒப்பிடும்போது, அலுவலகத்தின் மின்சாரப் பயன்பாடு 23.1 சதவீதமும், தாள்களில் அச்சிடுவது 59 சதவீதமும் குறைந்திருந்ததால், அலுவலக செலவுகளிலும் நிறைய மிச்சம் பிடிக்க முடிந்தது.

இதனால், குளிர்காலத்திலும் ஜப்பான் கிளையின் ஊழியர்களுக்கு அதிக ஓய்வு நேரத்தைக் கொடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், இப்போது வாரத்திற்கு 3 நாட்கள் என்ற விடுமுறை மட்டும், முன்பு இருந்தது போல மாற்றப்படும்.

நியூசிலாந்திலுள்ள `பெர்பெச்சுவல் கார்டியன் '(Perpetual Guardian) நிறுவனத்திலும் முன்பு இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டு, வெற்றிகரமான பலன்களை கொடுத்தது. இதனால், அந்த நிறுவனத்தில் வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை என்பது நிரந்தரமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் உள்ள நிறுவனங்கள், பணிநேரம், வேலைநாட்கள் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே லாபத்தை அதிகரிக்க முடியும் என்று கூறிவரும் நிலையில், இந்த ஆய்வுகள், அந்தக் கருத்துக்கு நேரெதிரான முடிவுகளைக் கொடுத்துள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted