சுஜித்தின் மறைவுக்கு இரங்கற்பா எழுதிய அமைச்சர் விஜயபாஸ்கர்

Oct 29, 2019 10:58 AM 512

குழந்தை சுஜித்தின் மறைவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கற்பா எழுதியுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதியுள்ள இரங்கற்பாவில், நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல்
என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்றும், என் மனம் வலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊணின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம்.

இப்படி எம்மைப் புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கருவறை இருட்டுப்போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துமனையில் வைத்து உச்சப்பட்ச மருத்துவம் பார்க்க நினைத்துக் காத்திருந்த நிலையில், பிணவறையில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச் சத்தம் தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை நிலையில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது எனக் குறிப்பிட்டுள்ளார். மனத்தைத் தேற்றிக் கொள்கிறேன், ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை என இரங்கற்பாவை முடித்துள்ளார்.

 

 

Comment

Successfully posted