சினிமா ரசிகர்களை, ஓடிடி தளங்களுக்குள் நெருக்கமாக அழைத்துவந்த ஆக்‌ஷன் வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட்

Aug 31, 2021 07:18 PM 16110

இந்திய சினிமா ரசிகர்களை, ஓடிடி தளங்களுக்குள் நெருக்கமாக அழைத்துவர காரணமான, பிரபல வெப் சீரிஸ்ஸான மணி ஹெய்ஸ்ட் கடந்து வந்த பாதையையும், வரவிருக்கும் அதன் 5வது சீசன் பற்றிய எதிர்பார்ப்பையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....

 

செப்டம்பர் 3ம் தேதி நெட்பிளிஸில் வெளியாகவுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ 5வது சீசனுக்கு, இந்திய ரசிகர்களிடம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2017ம் ஆண்டு ஸ்பானிஷ் க்ரைம் தொடராக தொலைக்காட்சியில் வெளியாகி, அதன்பின்னர் நெட்பிளிக்ஸ் வழியாக ரசிகர்களை ‘பெல்லா சவ்’ பாட வைத்தது மணி ஹெய்ஸ்ட்.

ஸ்பெயினில் கொள்ளையடிக்கும் கும்பலாக களமிறங்கும் புரொஃபசர் தலைமையிலான கூட்டத்திற்கும், காவல்துறைக்குமான அனல் பறக்கும் ஆக் ஷன் போராட்டம் தான், இந்தத் தொடரின் கதைக்களம்.

முதல் 2 சீசன்கள் ராய்ல் மிண்ட் ஆஃப் ஸ்பெயின் என்ற யூரோ கரன்சியை அச்சடிக்கும் இடத்தையும், அடுத்த இரு பாகங்கள் பேங்க் ஆஃப் ஸ்பெயின் என்ற தங்கம் வைத்திருக்கும் இடத்தையும் சுற்றி, மணி ஹெய்ஸ்ட் தொடர் மிரட்டலாக நகரும்.

பேங்க் ஆஃப் ஸ்பெயினில் சிக்கியிருக்கும் கொள்ளையர்களின் அடுத்த திட்டம் என்ன?, என்கிற பதபதைப்புடன் 4வது சீசன் முடிவடைந்ததால், 5வது சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மணி ஹெய்ஸ்ட் தொடருக்கு, முதலில் ‘ஹோப்லெஸ்’ (( Hopeless )) என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நெட்பிளிக்ஸ் தளத்தின் விருப்பம் படியே ‘மணி ஹெய்ஸ்ட்’ என டைட்டில் மாறியதாக கூறப்படுகிறது.

இந்த சீரிஸின் வெற்றிக்கு கைகொடுத்த ‘பெல்லா சாவ்’ பாடல், இரண்டாம் உலகப் போரின் போது, இத்தாலியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாடப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வெற்றியை குறிக்கும் வகையில் பாடப்பட்ட இந்தப் பாடல், இந்தத் தொடரில், புரொஃபசரும் அவரது குழுவினரும், தங்களை அரசுக்கு எதிரானவர்களாக மக்களின் பக்கம் இருந்து பாடுவதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மணி ஹெய்ஸ்ட் தொடரின் மற்றுமொரு சிறப்பு, டாலி என்ற முகமூடியும், புரொஃபசரின் குழுவினர் அணியும் சிவப்பு நிற ஜம்ப் சூட் உடையும்.  இவைகள் தற்போது உலகம் முழுதும் மிக பிரபலமாகியுள்ளது.

இந்த முகமூடி, பிரபல ஸ்பெயின் ஓவியரான டாலியின் முகத்தோற்றத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், மேக்கிங் இவைகளை தாண்டி, மணி ஹெய்ஸ்ட்டின் பாத்திரங்கள், இந்த சீரிஸ்க்கு மிகப் பெரிய பலம்.

முக்கியமாக புரோஃபசராக வரும் அல்வாரோ மார்டே ((Alvaro Morte)), டோக்கியோவாக தோன்றும் உர்சுலா கோர்பெரோ ((Ursula Corbero)), டென்வராக வரும் ஜெய்மே லோரெ ((Jaime Lorente)) உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

“உலகில் அனைத்தும் சமநிலையால் நிர்வகிக்கப்படுகின்றது. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள், எதை இழக்கிறீர்கள் என்பதில்தான் எல்லாமே இருக்கின்றது. உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வரும்போது, நீங்கள் அதீத வல்லமையைப் பெறுகிறீர்கள்”- என புரொஃபசர் உதிர்த்த இந்த வார்த்தைகளின் வழியே பார்க்கும் போது,

5வது சீசன் வாழ்வா... சாவா..? என்ற போராட்டத்தின்படி முடிவுக்கு வரும் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.....

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்.......

Comment

Successfully posted