போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி - உறவினர்கள் போராட்டம்

Dec 06, 2021 03:34 PM 1640

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த நிலையில் போலீசார் தாக்கியதால் மாணவன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் நீர்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிக்கண்டன் என்ற மாணவன், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்துள்ளனர்.

மணிகண்டனின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து மணிகண்டனை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில், மாணவன் திடீரென உயிரிழந்ததால், குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அடைந்தனர்.

image

போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டும் நிலையில்,அதனை மறுத்து மாணவன் பாம்பு கடித்து இறந்ததாக போலீசார் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Comment

Successfully posted