2015 ல் செய்த கொலை...! 7 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்ப்பு...!!

Aug 25, 2021 09:24 AM 1052

2015 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிவாங்க சென்னை வியாசர்பாடியில் பிரபல ரவுடி ஒருவர் வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வியாசர்பாடி ஜே ஜே ஆர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஹரி. இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் வைத்து ரவுடி பப்லு என்பவரை கொலை செய்ததாகவும் ஹரி மீது வழக்கு இருக்கிறது. இதற்கு பழி தீர்க்க 7 ஆண்டுகள் காத்திருந்த பப்லுவின் நண்பர்கள் தற்போது ஹரியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இரவு 11 மணி அளவில் ஜேஜே ஆர் நகரில் உள்ள ஹரியின் வீட்டுக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், கத்தி, இருப்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே ஹரி ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்த எம்கேபி நகர் காவல் துறையினர் ஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே நிகழ்த்தப்பட்ட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பப்லுவின் நண்பர்கள் சந்தோஷ், பிரவீன், வாசு, தினேஷ், அஜித், சங்கர், தமிம் மற்றும் சஞ்சய் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2015 ஆண்டு நடைபெற்ற கொலைக்கு பழிவாங்க 7 ஆண்டுகள் கழித்து தற்போது நடத்தப்பட்டு இருக்கும் கொலை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comment

Successfully posted