மக்களை மகிழ்விக்கும் நாசிக் தோல் கலைஞர்கள் - வாழ்வாதாரம் இழந்து தவிப்பு!

Jun 16, 2020 05:33 PM 728

மக்களைப் பெரிதும் மகிழ்விக்கும் நாசிக் தோல் கலைஞர்கள், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கும் தங்கள் கலையை, அங்கீகரிக்கப்பட்ட கலையாக அறிவித்து, நலவாரியத்தில் பதிவு செய்து உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்காட்டம்... புலியாட்டம்... கருஞ்சிறுத்தையாட்டம்.... துடும்பாட்டம்... என்பதெல்லாம், நாசிக் தோல் கலைஞர்களின் பிரத்யேக நடனங்கள்.... திருமணத்திற்கு ஒரு ஆட்டம்... அரசியல் நிகழ்வுகளுக்கு வேறு ஆட்டம்... வரவேற்புக்கு மற்றொரு ஆட்டம் என ரகம் ரகமான ஆட்டங்களை ஆடி அசத்துபவர்கள்தான் இந்த நாசிக் தோல் கலைஞர்கள்.

மதுரை, மேலவாசல் பகுதியை தங்களின் இருப்பிடமாக கொண்டுள்ள நாசிக் தோல் கலைஞர்களின் பெருமையைச் சரியாக நாம் உணர வேண்டுமானால், அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்த நிகழ்வை நினைவுகூற வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சந்திப்பில், நாசிக் தோல் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். அதில், அவர்களின் இந்த நடனத்திற்கு, பொதுமக்களிடமும், வெளிநாட்டவரிடமும் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதோடு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பல்வேறு நிகழ்ச்சிகளில், நாசிக் தோல் கலைஞர்களின் நடனமும் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவுக்கு அவர்களின் நடனத்திற்கு பல்வேறு மட்டத்திலும் ரசிகர்கள் உண்டு. மதுரையின் நாசிக் தோல் கலைஞர்கள் பயிற்சிப் பட்டறையில் பயின்ற 500-க்கும் மேற்பட்ட இளங்கலைஞர்கள், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கலை வளர்த்து வருகின்றனர்.

தங்கள் கலைக்கு மேலும் மெருகூட்ட புதிய புதிய பாணிகளை அறிமுகம் செய்து, வெளிநாட்டில் இருந்து புதிய ரக ஆடைகளையும், ஆபரணங்களையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சைனீஸ் டிராகன் உடையை அணிந்து, இவர்கள் ஆடும் நடனத்திற்கு பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் போன முதியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாவர். தாரை தப்பட்டை எடுத்து இவர்கள் அடிக்கத் தொடங்கும்போது, வேடிக்கை பார்ப்பவர்களில் ஆடத் தெரியாதவர்களின் கால்கள் கூட ஆடத் தொடங்கும்.

நாசிக் தோல் கலைஞர்களின் நடனத்திற்கு இப்படியாகப் பல பெருமைகள் இருந்தாலும், இன்றுவரை அவர்கள் முறைப்படியான கலைஞர்களாக, அங்கீகரிக்கப்படாத நிலையில்தான் உள்ளனர். ஆனாலும், தொடர்ந்து கிடைத்த வாய்ப்புக்களால், ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையைப் பெற்ற இவர்களுக்கு, இடையில் வந்த கேரள செண்டை மேளத்தின் வரவால், நாசிக் தோல் கலைஞர்கள் மெல்ல மெல்ல வாய்ப்புக்களை இழக்கத் தொடங்கினர். அதையும் மீறிக் கிடைத்த வாய்ப்புக்களால், வாழ்க்கையை ஓட்டிய நாசிக் தோல் கலைஞர்களை, கொரோனா ஊரடங்கு மொத்தமாக முடக்கிப் போட்டுள்ளது.

அனைவரின் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ள தங்கள் கலையை அங்கீகரிக்கப்பட்ட கலையாக அறிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில், நலவாரியத்தில் தங்களையும் பதிவு செய்து உரிய உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் நாசிக் தோல் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்து வாழும் கலைஞர்கள், தங்களுக்கான ஆதரவை மக்களிடமும், அரசாங்கத்திடமும் கேட்பது நியாயம்தானே!

Comment

Successfully posted