3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்

Nov 19, 2021 08:34 PM 1792

புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் குதித்தனர். குறிப்பாக, டெல்லியில் கடந்த ஓராண்டாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், முறைப்படி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்தார்.

image

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வேளாண் சட்டங்கள் குறித்து எவ்வளவு விளக்கியும், சிலருக்கு புரியவைக்க முடியாததால் வாபஸ் பெறுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பால், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். உறுதிக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் அறிவிப்பு உண்மைக்கும், நீதிக்கும், அறப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

Comment

Successfully posted