திருவண்ணாமலை கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபத்திருவிழா

Nov 15, 2019 09:36 AM 127

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேசுவரர் கோயிலில், அடுத்த மாதம் கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, டிசம்பர் 10-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தீபத் திருவிழாவுக்கு 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். கிரிவலப்பாதை உட்பட கோயிலைச் சுற்றி 351 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார். மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் ஏற 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். திருவிழா நேரத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

Comment

Successfully posted