ஹெல்மேட் கட்டாயம் இல்லை :மோட்டார் வாகன சட்டத்தை திருத்திய குஜராத் அரசு

Dec 05, 2019 09:14 PM 534

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி வரும் நிலையில், குஜராத் மாநில அரசு நகர்புறங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் ஹெட்மேட் அணிவது கட்டாயமில்லை என சட்டம் இயற்றியுள்ளது.

தமிழகத்தில் பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இருசக்கர வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் அதிகபட்ச அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றமும் ஹெல்மேட் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதனால் சென்னையில் 99 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டே வாகனம் ஓட்டுவதை பார்க்கலாம். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வாசகத்தை உணரா விட்டாலும் கூட காவல்துறையினருக்கு பயந்து ஹெல்மெட் அணிபவர்கள் ஏராளம். இந்த நிலையில்தான் குஜராத் அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது நகரங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் விருப்பப்பட்டால் ஹெல்மெட் அணியலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குஜராத் போக்குவரத்து காவல் துறையினரின் கெடுபிடிகள் குறித்து மாநில அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில் இதுபோன்ற சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் இந்த சட்டம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு சிறு விதிமீறலுக்கு கூட அதிகபட்ச அபராதம் விதித்தது. இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் குஜராத் அரசு மட்டும் பின்னோக்கி செயல்பட்டால் கேள்வி எழத்தானே செய்யும்

Comment

Successfully posted