விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

Mar 08, 2019 06:21 PM 192

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகாரபூர்வ அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது.

ஆனால் தியாகராய நகரில் நடிகர் விஷால், பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்று மற்றொரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சங்கத்திற்கு மற்றொரு தரப்பினர் பூட்டு போட்டனர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது விஷாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள நோட்டீசில், 2017 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை என்றும், இது சங்க விதிகளை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி, அந்த கட்டிடத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படுவதற்கும், அதற்காக செலவிடப்பட்ட முன் தொகை 16 லட்சம் ரூபாய், மற்றும் மாத வாடகையாக 2 லட்சம் ரூபாய்க்கும் சங்க நிர்வாக குழுவின் அனுமதி பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்தில் இருப்பில் இருந்த சுமார் 7 கோடி ரூபாயை பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் சட்டவிதிகளை மீறி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்காக செலவு செய்திருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க கோரி பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் விஷால் தலைமையிலான நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

Comment

Successfully posted