சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க வர உள்ளது விதிமுறைகள்

Sep 26, 2019 09:46 PM 111

'சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கி, மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று உத்தரவிட்டது. இந்தியாவிற்கு முன்னோடியாக, உலகின் மற்ற நாடுகள் எப்படி போலி செய்திகளை தடுத்து உள்ளன.


போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முன்னோடி நாடாக மலேசியா உள்ளது. அங்கு கடந்த ஆண்டே போலி செய்திகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி சமூக வலைத் தளங்களில் தவறான செய்திகளைப்
பரப்புபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமோ, 6 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனானது கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது காப்புரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் உள்ள பயனாளர்கள் தவறு செய்யும் போது அதற்கான பொறுப்பை அந்தக் குறிப்பிட்ட சமூக
வலைத் தளமே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் அறிவுசார் சொத்துரிமை பெற்ற தகவல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றை இணையத்தில் தவறாகப் பயன்படுத்துவதையும் இந்த சட்டத் திருத்தம் கட்டுப்படுத்தியது. இதனால் ஐரோப்பிய
நாடுகளின் சமூக வலைத் தளங்கள் மட்டுமின்றி இணைய சேவை வழங்கும் நிறுவனம், தேடுபொறிகள் ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டன.

சிங்கப்பூரில், இணையத்தில் போலியான மற்றும் அபாயகரமான செய்திகளைத் திட்டமிட்டு பரப்புபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் சட்டம் தற்போது வரைவாகத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலி செய்திகளைத் தடுக்கத் தவறும் சமூக
வலைத்தளங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும், போலி செய்திகளைப் பகிரும் தனிநபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் சிறை விதிக்கவும் இந்த வரைவில் திட்டங்கள் உள்ளன.

ஜெர்மனியில் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு என ‘நெட்ஸ் டிஜி’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி சமூக வலைத்தள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் புகார்களை கவனித்து சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை நீக்கும் பணியை 24 மணிநேரமும் செய்ய வேண்டும்.

அரசின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் வரையிலான அபராதம்
விதிக்கப்படும், தவறு செய்யும் தனி நபர்களும் 40 கோடி ரூபாய் வரையிலான அபராதத்தை சந்திக்க நேரிடும்.

ஆஸ்திரேலியநாடு இவ்வாண்டு தொடக்கத்தில் நிறைவேற்றிய சட்டத்தின்படி, தீவிரவாதம், கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர குற்றப் பின்னணி கொண்ட போலிச் செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களுக்கு அவற்றின் ஆண்டு
வருமானத்தில் 10 சதவிகிதம் வரையிலான தொகையை அபராதமாக விதிக்க முடியும். தவறான செய்தியை நீக்கத் தவறிய அந்த நிறுவனத்தின் தொழிழ்நுட்பப் பிரிவு ஊழியர்களுக்கும் 3 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும்
இந்தச் சட்டத்தின் மூலம் பெருநிறுவனங்களுக்கு 4 கோடி ரூபாய் வரையிலான அபராதத்தையும் தனி நபர்களுக்கு 80 லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்தையும் விதிக்க முடியும்.

பிரான்ஸ் நாடு கடந்த அக்டோபரில் போலி செய்திகளுக்கு எதிராக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தது. இதன் மூலம் தவறான செய்திகளைப் பரப்பும் ஊடகத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் பிரான்ஸின் தகவல் ஒளிபரப்புத்துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ரஷ்யாவில் கடந்த மார்ச்சில் கொண்டுவரப்பட்ட சட்டமானது, தேசத்தை அவமதிக்கும் செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு 16 லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்தையும், தேசச் சின்னங்கள் மற்றும் தலைவர்களை அவமதிக்கும் செய்திகளை
வெளியிடுபவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்தையும், தொடர்ந்து தவறிழைப்பவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனையையும் விதிக்கின்றது.

Comment

Successfully posted