ஆன்லைன் வர்த்தகம் உயர காரணம் என்ன?

Mar 20, 2020 01:30 PM 7024

கொரோனா அச்சம் காரணமாக உலகின் பல்வேறு துறைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலில், ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனை மட்டும் தொடர்ந்து  அதிகரித்து வருகின்றன. இதன் காரணங்கள் என்ன? - விரிவாகப் பார்ப்போம்…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஷாப்பிங் மால்கள், கடைவீதிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொருட்களை வாங்கத் தேவை உள்ளவர்களின் ஒரே  புகலிடமாக ஆன்லைன் நிறுவனங்கள் மாறி உள்ளன.

இன்னொரு பக்கம் திடீரென வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை  வாங்கவும் ஆன்லைன் தளங்களையே நம்புகின்றனர் இதனாலும் ஆன்லைனில் ஆர்டர்கள்
குவியத் தொடங்கி உள்ளன. மூன்றாவதாக, வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பொழுது போக்குக்குத் தேவையான பொருட்களையும் ஆன்லைனில்தான் ஆர்டர் செய்கின்றனர்.  இன்னொரு பக்கம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதையே சிலர் பொழுது போக்காகவும்  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் காரணங்களால் கொரோனா அச்சத்தால் முடங்கி உள்ள நாடுகளில் ஆன்லைன் விற்பனையானது பெருமளவு உயர்ந்து உள்ளது. மக்கள் வாங்கிக் குவிப்பதால், பிற அனைத்து நிறுவன ஊழியர்களும் முடங்கி உள்ள சூழலில் ஆன்லைன் விற்பனை நிறுவன
ஊழியர்கள் சுழன்று சுழன்று வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசானில் ஆர்டர்கள் குவிந்து  கொண்டே செல்வதால் அங்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது, இதனையடுத்து அமெரிக்காவின் அமேசான் கிளை 1 லட்சம் பணியாளர்களைக் கூடுதலாகப் பணியமர்த்துவதாக அறிவித்து உள்ளது. அமேசானில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை  பார்ப்பவர்களுக்கு மணிக்கு 15 டாலர் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய பணியாளர்களுக்கு அந்த ஊதியம் 17 டாலர்களாக உயர்த்தப்படுவதாகவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு நாடுகளில் உள்ள ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் புதிய பணியமர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவால் உலகப் பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில், கொரோனாவால் ஆன்லைன் பொருட்களின் விற்பனை  தொடர்ந்து அதிகரித்து வருவது மிகப் பெரிய பொருளாதார முரணாக விளங்குகின்றது. ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களும் கூட கொரோனா விவகாரத்தில் விழிப்புடன்  இருக்க வேண்டும் - என இந்திய அரசு தனது 15 அம்ச வழிகாட்டுதல்களில்  குறிப்பிட்டு இருந்ததையும் மக்கள் இங்கு மறக்கக் கூடாது.

Comment

Successfully posted