ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு

Nov 18, 2019 08:12 PM 172

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆண்டுந்தோறும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், தகவல் மையம் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பக்தர்கள் தேவையான தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல் இந்தாணடும் தேனி - குமுளி சாலையில் அமைந்துள்ள வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையிலும் 24 மணிநேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் மையங்களில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வெடுக்கும் அறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Comment

Successfully posted