அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு

Sep 17, 2021 08:31 PM 724

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த விஜயபாரதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம் என்றும், இதுதொடர்பாக கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏ. அனுமதியின்றி கட்டிய கட்டுமானத்தை இடிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் தடுக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

Comment

Successfully posted