திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம்

Aug 22, 2019 05:24 PM 284

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்கு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

ப.சிதம்பரம் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை. முதன்முறையாக சிதம்பரத்தைக் கைது செய்தது தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுகவின் அரசுதான்!

கடந்த 1989 ஆம் ஆண்டு சென்னை மறைமலை ரயில்வே நிலையத்துக்குக் காங்கிரஸ் தலைவர் காமராசர் பெயரை வைக்க நடந்த போராட்டத்தில் சிதம்பரமும் கலந்துகொண்டார். அதனால் அவர் திமுக அரசால் கைது செய்யப்பட்டு 15 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

ஒரு பொதுப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ப.சிதம்பரத்தைக் கைது செய்த திமுக, இன்று அவரை ஊழல் வழக்கில் கைது செய்யும் மத்திய அரசிற்கு ‘காழ்ப்புணர்ச்சி’ உள்ளதாகக் கூறுவது அரசியல் விநோதங்களில் ஒன்று.

திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று காலையில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்த கருணாநிதி, அன்றைக்கு மதியம் 12.30 மணிக்கே அந்த உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொண்டார். அதற்குக் காரணமாக கருணாநிதி கைகாட்டியது அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைதான்.

ப.சிதம்பரம் தன்னிடம் தொலைபேசியில், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளது என்று கூறினார். அதனால்தான் உண்ணாவிரத்தைக் கைவிட்டேன் என்று கருணாநிதி ஊடகங்களிடம் கூறினார். அதன் பின்னர் இலங்கையில் உச்சகட்ட இனப்படுகொலை நடந்தபோது திமுகவினர் ப.சிதம்பரத்தை திட்டாத மேடைகளே கிடையாது.

பின்னர் 2ஜி வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்ட போது, திமுகவுக்கு உதவ ப.சிதம்பரம் மறுத்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. ‘கூடா நட்பு’ என்று கருணாநிதி காங்கிரஸை அழைக்கக் காரணமாக இருந்தவர் ப.சிதம்பரம் தான். இதனால் ப.சிதம்பரம் கைதை திமுக கொண்டாடுகிறதோ என்ற சந்தேகமும் அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் விவகாரத்தில் திமுக மட்டுமின்றி திமுகவின் ஆதரவுக் கட்சிகளும் கடைசி நேரத்தில் கை கழுவுகின்றன. சிதம்பரம் கைதுக்கு எதிராக காங்கிரஸ் தொடங்கியுள்ள போராட்டத்திற்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அதில் பங்கேற்க இயலாது என்று கூறியுள்ளார்.

ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களால் கூட வாயைத் திறக்க முடியவில்லை எனும் நிலையில், ப.சிதம்பரத்தின் மீது, ஆதாரங்களோடு தொடரப்பட்ட வழக்கை ‘காழ்ப்புணர்ச்சி’ என்று ஸ்டாலின் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Comment

Successfully posted