கோவையில் அரசு விழா! - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

Feb 26, 2021 11:14 AM 2645

கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

"கோவை கொடிசியா வளாகத்தில்" நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணை புனரமைப்பு மேம்பாட்டு திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கீழ் பவானி திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், காவிரி - கோதாவரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் அடிக்கல் நாட்டிய, கீழ் பவானி விரிவாக்க திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார். நெய்வேலி புதிய அனல்மின் திட்டப் பணிகளால் தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும் என துணை முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Comment

Successfully posted