ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் சதித்திட்டம்!

Aug 17, 2020 10:09 PM 668

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்துவதற்காக, ஆளில்லா விமானங்களை இயக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் உளவு பார்க்கவும், சதித் திட்டங்களை செயல்படுத்தவும் பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதற்காக சீனாவிடம் இருந்து CH-4 ஆளில்லா விமானங்களை வாங்கும் பணிகளில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவ பிரிகேடியர் முகம்மது ஸாபர் இக்பால் தலைமையிலான பத்து வீரர்கள் கொண்ட குழு, சீனா சென்று, ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக ஆய்வு செய்துள்ளது. CH-4 ஆளில்லா விமானங்கள், ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 300 கிலோ எடை கொண்ட பொருட்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை. இது போன்ற ஆளில்லா விமானங்கள், ஈராக் மற்றும் பிரான்ஸ் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள், பாகிஸ்தானுடன் சேர்ந்து சதித்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted