ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு 3 - 7 ஆண்டுகள் வரை சிறை

Dec 06, 2019 11:49 AM 6402

குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த நவம்பர் மாதம் ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1500 நபர்கள் குழந்தை ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக கூடுதல் ஏ டி ஜி பி ரவி தெரிவித்துள்ளார். உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னையில் தான் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்க்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது.

நமது காவல் துறை அமெரிக்காவின் புலணாய்வு துறை உதவியுடன் ஆபாச படங்களை இணையத்தில் பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் அதை ஷேர் செய்யும் ஐபி அட்ரெஸ்க்ளை தமிழக காவல் துறைக்கு அனுப்பியுள்ளனர் . தமிழக காவல் துறையும் கூடுதல் ஏ.டி.ஜி.பி ரவி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது .

அந்த குழு குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றுபவர்கள் , இணையத்தில் ஷேர் செய்பவர்கள் அதை பார்ப்பவர்கள் என அனைவரையும் கைது செய்ய ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்வதும் அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதும் குற்றமாகும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆபாச படம் பார்ப்பவர்களின் டிஜிட்டல் ஆதாரங்களை கொண்டு அவர்கள் மீது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவரக்ளுக்கு 3 ஆண்டில் இருந்து 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர் காவல்துறையினர்.

மேலும் கைதுசெய்யப்படுபவர்கள் மீது போக்ஸோ மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படும் என்றும் இதுபோல குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்புபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் 155260 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted