புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் செல்வகணபதி போட்டி

Sep 22, 2021 07:12 AM 2013

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக, பாஜக மாநில பொருளாளர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான கோகுல கிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் 6ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அப்பதவிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கக் கோரி, பாஜக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர். மேலும், பாஜக அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்று கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பாஜக தலைமை, முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டு கொண்டதற்கிணங்க ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க மாநில பொருளாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏவுமான செல்வகணபதி, மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது வேட்புமனுவை, சட்டபேரவை செயலர் முனுசாமியிடம் தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள்
உள்ளதால், செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Comment

Successfully posted