தமிழ் சிறுகதைகளின் பிதாமகர் புதுமைப்பித்தனின் 115வது பிறந்த தினம்

Apr 25, 2021 01:40 PM 1956

மிகச் சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும், புதுமையும், கம்பீரமும் தரக்கூடிய ஆற்றல்கொண்ட எழுத்து நடையால் எண்ணற்றோரை வசீகரித்த, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் 115வது பிறந்த தினம் இன்று

 

தமிழ் இலக்கியப் பெருவுலகின் குறிஞ்சி மலரான புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருதாச்சலம், 1906 ஆம் ஆண்டு கடலூர் அருகேயுள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.

நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட புதுமைப்பித்தன், இளம் வயதிலேயே வறுமை, போராட்டம், வலிகள் போன்ற அவர் பெற்ற அனுபவங்களால், கூரிய சமூக விமர்சனமும், நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட பல படைப்புகளை படைக்க வித்திட்டன.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிய அடுக்குகள், பெண்ணடிமை போன்றவை குறித்து புதுமைப்பித்தனின் கதைகள் மிகக் கூர்மையான மொழியில் பேசுகின்றன.

அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை, வாழ்வின் முரண்பாடுகளை, சமூகத்தின் கையாலாகாத்தனத்தை, தமிழ்ச் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையை புதுமைப்பித்தன் அளவுக்கு சிறுகதைகளின் வழியாக துகிலுரித்துக் காட்டியவர்கள் யாருமில்லை.

புராணக் கதைகளில் வரும் காவியப் பாத்திரங்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கேள்விகள் கேட்பதிலும் புதுமைப்பித்தனுக்கு நிகர் புதுமைப்பித்தனே!.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் காதல் ரசம் சொட்டும் கதையாக மட்டும் இல்லாமல், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெற்ற ஒரு காதல் காவியமாக ‘செல்லம்மாள்’ என்றென்றும் நிலைத்திருப்பாள்.

தமிழ்ச் சிறுகதைக்கு உருவமும் உள்ளடக்கமும் கொடுத்து, மூச்சுக்காற்றை வாய் வைத்து ஊதி உயிர் கொடுத்தவர் புதுமைப்பித்தன்.

அவர் தீவிரமாக சிறுகதைகள் எழுதிய 1930 முதல் 40 வரையிலான காலக்கட்டம், தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம்.

இலக்கியம், திரைத்துறை என தமிழ் இலக்கியத்தின் நவரத்தினமாய் ஜொலித்த புதுமைப்பித்தனின் படைப்புகள் 2002 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்...

Comment

Successfully posted