குப்பைகளை சேகரிக்க கியு ஆர் கோட்!!- குப்பையால் உயர்ந்த தரங்கம்பாடி பேரூராட்சி!!

Jul 09, 2020 08:15 AM 573

தமிழகத்திலேயே முதன்முறையாக, குப்பைகளை சேகரிக்க, கியூ.ஆர் கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்தியதோடு, குப்பைகள் மூலம் உரம் தயாரித்து வருவாய் ஈட்டி, மற்ற பேரூராட்சிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது, தரங்கம்பாடி பேரூராட்சி. அது பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியானது, 18 வார்டுகளையும், 3 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 452 வணிக நிறுவனங்களும் இந்த பேரூராட்சியில் உள்ளன. தரங்கம்பாடி பேரூராட்சியில் கடந்த 2006ம் ஆண்டு முதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். அதோடு, பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வளம் பூங்காவில், குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்து, அதன்மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். கடந்த 2014-2015ம் ஆண்டில், தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசையும், 2018-ம் ஆண்டு இந்திய அளவில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் இரண்டாம் இடத்தையும், இந்த பேரூராட்சி பெற்றுள்ளது.

இந்நிலையில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர், வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதை உறுதி செய்வதற்கும், பொதுமக்கள், தரம் பிரித்து குப்பைகளை அளிப்பதை கண்காணிப்பதற்கும், கியூ.ஆர். கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக 600 வீடுகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி உள்ளனர். குப்பைகளை எடுக்க வரும் பேரூராட்சி ஊழியர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பெற்றுகொண்டு, செல்போனில் கியூ.ஆர் கோடு மூலம் பதிவு செய்து, குப்பை வழங்காத நபர்கள் கண்டறியப்பட்டு, தெருக்களில் கொட்டாமல், தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்குகின்றனர்.

இது மட்டுமல்லாமல், மக்கும் குப்பைகளில் உரம் தயாரித்து, இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கும், மண்புழு உரம் கிலோ 8 ரூபாய்க்கும், இறைச்சிக்கழிவு உரம் 10 ரூபாய்க்கும், விற்பனை செய்கின்றனர். அதே போன்று, மக்காத பிளாஸ்டிக், இரும்பு, பாட்டில், அட்டைகள், பால் கவர், எண்ணெய் கவர்கள் போன்றவைகளை, இனம் வாரியாக தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றின் மூலம் வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டுகின்றனர்.

இதோடு, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிலேயே உரக்குழி அமைத்து, சொந்தமாக குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிப்பதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர். பொது மக்கள் ஒத்துழைப்புடன், தமிழகத்தின் சிறந்த பேரூராட்சிக்கான விருதை மீண்டும் பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் தரங்கம்பாடி பேரூராட்சி ஊழியர்கள்.

Comment

Successfully posted