பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி

Sep 22, 2021 07:51 AM 2330

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் அணி, துவக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான் ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகிய இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய, மஹிபால் லோம்ரோர் 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பஞ்சாப் அணி சிறப்பாக பந்துவீசியதால், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த இணையில், அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட மயங்க் அகர்வால், 67 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மார்கிராம் மற்றும் நிக்கோலஸ் பூரன், அதிரடியாக விளையாடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். இதனால் பஞ்சாப் அணி போட்டியில் வென்று விடும் என்ற நிலை இருந்த போது, ராஜஸ்தான் அணி நேர்த்தியான பந்துவீச்சால் ரன் குவிப்பை தடுத்தது. இதனால் பஞ்சாப் அணி திக்குமுக்காடி கொண்டாடி இருந்தது. சிறப்பாக கேப்டன் ஷிப் செய்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கடைசி ஓவரை கார்த்திக் தியாகிக்கு வழங்கினார். அந்த ஓவரில் வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில், நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் டக் அவுட் ஆனதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 20 ஒவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, த்ரில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு வழங்கப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை......

துபாயில் இன்று இரவு நடைபெறும் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப்பட்டியலில், டெல்லி அணி 2வது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று, தோல்வியில் இருந்து மீண்டு எழும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

 

 

 

Comment

Successfully posted