ராமாயணத்தோடு வரலாற்று தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்!!- சிறப்பு தொகுப்பு

Aug 12, 2020 07:28 AM 3136

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமலிங்கத்தை வழிபட, இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். ஆயிரத்து 212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றதாக கருதப்படுகிறது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணிக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என்பது ஐதீகம். அவனுக்கு காட்சி தந்த பரமேஸ்வரன், விபீஷணனின் பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.  அதேபோல் ஆஞ்சநேயர் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறத்தில் விஸ்வநாதர் சன்னதி உள்ளது. விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, ராமநாதருக்கு பூஜை நடைபெறுகிறது.சீதாப்பிராட்டியால் உருவாக்கப்பட்ட இவ்வளவு பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தலத்திற்கு, வாழ்நாளில் ஒரு நாளேனும் சென்று வரவேண்டும் என பக்தர்கள் கருதுவதில் ஆச்சர்யமேதுமில்லை.

 

Comment

Successfully posted