சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Oct 11, 2020 06:58 AM 1616

ஐ.பி.எல். தொடரின் 25வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் 2 ரன்களில் ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, படிக்கல்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

படிக்கல் 33 ரன்களிலும், டிவில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கோலி 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

image

170 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் 14 ரன்களிலும், டூப்ள்சிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், ராயுடு - ஜெகதீசன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு கணிசமான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஜெகதீசன் 33 ரன்களிலும், ராயுடு 42 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், சென்னை வெற்றி பெற கடைசி 5 ஒவர்களில் 74 ரன்கள் தேவைப்பட்டது. பெரிதும் எதிர்க்கப்பட்ட தோனி 10 ரன்களில் வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை, நடைபெற்ற 7 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், சென்னை அணியின் PLAY OFF கனவு கடினமாகியுள்ளது.

Comment

Successfully posted