ஜம்மு-காஷ்மீரில் 5 மாதங்களுக்குப் பிறகு ப்ரீபெய்டு சேவை மீண்டும் தொடக்கம்

Jan 19, 2020 07:03 AM 798

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் 5 மாதங்களுக்கு பிறகு ப்ரீபெய்டு மொபைல்களுக்கான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியும் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. தொலைபேசி, மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் காஷ்மீர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் போஸ்டு பெய்டு மொபைல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இணையச் சேவைகளும், ப்ரீ-பெய்டு மொபைல் சேவைகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில்  ப்ரீபெய்டு மொபைல் சேவை  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒரு வாரத்துக்குள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 10-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ப்ரீபெய்டு மொபைல் சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted