இறப்பதற்கு முன்னர் முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Oct 07, 2019 06:53 AM 115

தேனி அருகே கடந்த மாதம் இயற்கையாக மரணம் அடைந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட முதியவர், இறப்பதற்கு முன்னர் அடித்து துன்புறுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த 75 வயதான ராஜாராம் என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை, உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் கடை வைத்திருக்கும் தீபக் என்பவர், தனது கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை எதேச்சையாக பார்த்துக் கொண்டிருந்தபோது, கடந்த 5 -ஆம் தேதி இரவு முதியவர் ராஜாராமை, ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, இது குறித்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தீபக் புகார் அளித்தார் .

இந்த புகார் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முதியவர் ராஜாராம் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு 6 நாட்கள் கழித்து 11 ஆம் தேதி இறந்தைக் கண்டறிந்தனர்.

இது ஒரு இயற்கையான மரணம் என உறவினர்கள் இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர். ஆனாலும் 6 நாட்களாக சிகிச்சையில் இருந்தவர் தான் தாக்கப்பட்டதை உறவினர்களிடம்
கூறினாரா? அல்லது அவர் தகவல் தெரிவித்தும் உறவினர்கள் அதை மறைத்து விட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இறந்த முதியவர் மரணத்தில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
நடத்த முடிவு செய்தனர். அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ராஜாராமின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மயானத்திலேயே மருத்துவர்களால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ராஜாராம் உடலின் ஒரு சில பாகங்கள், பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் மீண்டும் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

முதியவர் ராஜாராம் தாக்கப்படும் காட்சிகள் பழனிசெட்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு கம்பியால் தாக்கியவர் யார்? எதற்காக
தாக்கினார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவரின் வயதைக் கூட பொருட்படுத்தாமல் மிருகத்தனமாக அவரைத் தாக்கிய அந்த நபரை காவல்துறையினர் விரைவில் கண்டறிந்து, கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே, இது போன்ற குற்றச்சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கும்.

Comment

Successfully posted