ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள் ; காலாவதியான மருந்தினை விற்பனை செய்வதாக புகார்

May 10, 2021 06:00 PM 165

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மருந்து தீர்ந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

தினந்தோறும் 200 பேருக்கு மருந்து விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், குறைந்த அளவிலான மருந்துகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் விற்பனையகம் முன்பு குவியத் தொடங்கினர்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், மக்களை பாதுகாப்பு இடைவெளி விட்டு நிற்கவும், அமரவும் வைத்தனர்.

300 டோஸ் மருந்துகள் மட்டுமே வந்துள்ள நிலையில், ஒரு நபருக்கு 6 டோஸ் வீதம், 50 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஒரு நபருக்கு 3 டோஸ் வீதம் 100 பேருக்கு மருந்து வழங்கப்பட்டதால், மீதமிருந்த பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

 

 

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில் மருந்தினை பெற மக்கள் குவிந்தனர்.

மாலை 3 மணிக்கு, விற்பனையின் தொடக்கத்தில், உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை மாற்றி புதிய ஸ்டிக்கர் ஒட்டிய ரெம்டேக் எனப்படும் மருந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ரெம்டெக் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் என போராட்டம் நடத்தியதை அடுத்து, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இல்லை என்பதை காலதாமதமாக அறிவித்ததால், மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே மருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ள நிலையில்,  மருந்தை பெற வந்தவர்களின் நிலை என்ன என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது

Comment

Successfully posted