குடியரசுதின நிகழ்வுகள் - சுதந்திர தின நிகழ்வுகள்: வேறுபாடுகள்

Jan 26, 2020 07:54 AM 494

சுதந்திரதினம், குடியரசு தினம் - ஆகிய இரண்டு தினங்களிலும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யப்படுகின்றது. ஆனால் இப்படியாக இந்த இரண்டு தினங்களிலும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யப்படுவதில் மூன்று  முக்கிய வித்தியாசங்கள் உள்ளன.

குடியரசுதின நிகழ்வுகள் - சுதந்திர தின நிகழ்வுகள்: வேறுபாடுகள்

வித்தியாசம் 1: நிகழ்வின் முறை
 
ஆகஸ்ட் பதினைந்து இந்திய சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை  ஏற்றும்போது, கொடியானது கொடிக் கம்பத்தில் கீழிருந்து மேலே கயிற்றால்  முதலில் இழுக்கப்படும். பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு Flag hoisting அதாவது கொடியேற்றம் என்று பெயர்.
 
ஜனவரி இருபத்து ஆறு  குடியரசு தினத்தின்போது, கொடியானது ஏற்கனவே கொடிக் கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். நிகழ்வில் கொடியைக் கட்டியுள்ள கயிற்றின் முடிச்சு அவிழ்க்கப்பட்டு கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதற்கு flag unfurling அதாவது கொடியை பறக்கவிடுதல் என்று பெயர்.
 
வித்தியாசம் 2: நிகழ்வில் பங்கேற்கும் நபர்
 
1947 ஆகஸ்டு 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது அரசியல் சாசனம் எழுதப்பட்டிருக்கவில்லை. எனவே பிரதமரே அப்போது நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்பட்டார். இதனால் சுதந்திர தினத்தில் எப்போதும் பிரதமர்தான் கொடியை ஏற்றுவார். குடியரசுத் தலைவர் அன்று மாலை வானொலி, தொலைக்காட்சிகளில் உரைகளை மட்டுமே நிகழ்த்துவார்.
 
ஆனால் குடியரசு தினம் என்பது அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாள். குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் சாசனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர். எனவே குடியரசு தினத்தில் ’தேசத்தின் முதல் குடிமகன்’ என்று அரசியல் சாசனத்தால் அறிவிக்கப்பட்டவர், அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசுத் தலைவர்தான் தேசியக் கொடியை பறக்கவிடுவார்.
 
வித்தியாசம் 3: நிகழ்வு நடக்கும் இடம்
 
சுதந்திர தினத்தன்று தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படுகின்றது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்  பாத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படுகிறது.

Comment

Successfully posted