16 வயது சிறுமியை திருமணம் செய்த ரவுடி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

May 18, 2021 05:47 PM 1360

 

சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் 28 வயதான சரத். அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

திருமணம் வயதை கூட எட்டாத சிறுமியை, கடந்த 10-ம் தேதியன்று பெரியப்பாளையம் கோவிலில் வைத்து சரத் திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே ரவுடி சரத், தன்னுடைய சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளார். கரம்பிடித்த சிறுமியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ள சரத், வீட்டில் சமையல் சரியாக செய்யவில்லை என கூறி, சிறுமியின் தலை, கை, கால் ஆகியவற்றை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதற்கு ரவுடியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

உடலில் வெட்டு காயங்களுடன், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பெற்ற நிலையில் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடி சரத்தையும் அவரது தாயாரையும் கைது செய்தனர். குறிப்பாக ரவுடி சரத் 16 வயது சிறுமியை சட்டத்திற்கு விரோதமாக திருமணம் செய்ததால், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, பிரபு என்பவரை தேடி வருகின்றனர்.

 

Comment

Successfully posted