போலி கையெழுத்து போட்டு ரூ.9 கோடி மோசடிǃ

Jun 13, 2020 12:46 PM 1286

இறந்துபோனவரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, பொது நல சங்கத்தை அறக்கட்டளையாக மாற்றிய மோசடி கும்பல், 9 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில், வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் மற்றும் உரிமையாளர் நலச் சங்கம் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 144 உறுப்பினர்கள் உள்ள இந்தச் சங்கத்திற்குச் சொந்தமாக மெட்ரிக் பள்ளிக்கூடம் ஒன்றும், கோயில் ஒன்றும் உள்ளது. சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளே, சங்கத்திற்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தையும் நிர்வகித்து வந்தனர். சிறப்பாகச் செயல்பட்டு வந்த பள்ளியின் வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. பள்ளிக்கூடத்தின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், செலவு செய்வதற்கும், சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதோடு, அந்தத் தீர்மானத்தை, அதிக உறுப்பினர்கள் ஆதரித்துக் கையெழுத்துப்போட்டால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும் என்பதும், அதன் பிறகே பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியும் என்பதும் சங்கத்தின் விதியாக இருந்து வந்தது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிர்வாகிகள், கடந்த 2011-ஆம் ஆண்டு, சங்கத்தின் பொதுக்குழு கூடியதாகவும், அந்தப் பொதுக்குழுவில், சங்கத்தை அறக்கட்டளையாக மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களைக் கொண்டு, குடியிருப்போர் மற்றும் உரிமையாளர் நலச் சங்கத்தை, அறக்கட்டளையாக மாற்றி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர். அதையொட்டி, பள்ளிக்கூடத்தின் வங்கிக் கணக்கிலிருந்தும் பல கோடி ரூபாய்களை தன்னிச்சையாக எடுத்து கையாடல் செய்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அதன்பிறகு வந்த நிர்வாகிகள் பள்ளிக்கூடத்தில் சில மாற்றங்களைச் செய்ய சங்கத்தை கூட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அப்போது, அதில் தலையிட்ட முந்தைய நிர்வாகிகள் கொண்ட 15 பேர் குழு, சங்கம் அறக்கட்டளையாக மாறிவிட்டது என்றும்... அதனால், பள்ளி நிர்வாகத்தில் தங்களைத் தவிர வேறு யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். இதையடுத்து, ஆவணங்களைப் பரிசோதித்தபோது, போலியாக பலரின் கையெழுத்துப் போடப்பட்டு இருந்ததும், 2008-ஆம் ஆண்டே இறந்து போன கூட்டுறவு வங்கியின் டிரைவர் ருத்ரசேகர் என்பவரின் கையெழுத்தும் அதில் போடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கிலிருந்து 9 கோடி ரூபாய் பணம் தவணை முறையில் அறக்கட்டளை செலவிற்கு எடுக்கப்பட்டதும், அவற்றுக்கு முறையான வரவு செலவு கணக்குகள் எதுவும் இல்லாமலிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலி கையெழுத்துக்கள் மூலம் ஆவண மோசடி செய்தது, சங்கத்தின் பணத்தைக் கையாடல் செய்தது உள்பட பல்வேறு பிரிவுகளில், சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற பத்திரப் பதிவு அலுவலர் கே.கிருஷ்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வளையாபதி மற்றும் வேலு என்பவர் உள்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted