நிறைவடைந்தது எஸ்.பி.பி.யின் உடல் அடக்கம் - 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

Sep 26, 2020 11:20 AM 644

சென்னை தனியார் மருத்துவமனையில் 51 நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் சற்று முன் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

image

பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பாக, காவல்துறையினர், 72 குண்டுகளை வெடித்து முழங்கி, அரச மரியாதையைச் செலுத்தினர். மேற்கொண்டும், புதைக்குழிக்குள் எஸ்.பி.பி.யின் உடல் இறக்கப்பட்டு, கடைசிக்கட்ட இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பிடிமண்ணும், மலர்களும், இடப்பட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

 image

51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். அரசுத் தலைவர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரபலங்களும், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல், செங்குன்றம் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள, அவரது பண்ணை இல்லத்திற்கு, நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட போது, வழி நெடுகிலும் கூடியிருந்த அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 image

பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த முன்னதாக அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் மற்றும் ரசிகர்களின் கட்டுக்கடங்காத உணர்வுமயத்தால், பாதுகாப்பான முறையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால், நூற்றுக்கணக்கானோர் தாமரைப்பாக்கத்தில், எஸ்.பி.பி,க்கு நேரில் அஞ்சலி செலுத்த முடிந்தது.

Comment

Successfully posted