எஸ்.பி.பி. உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் நல்லடக்கம்!

Sep 26, 2020 07:49 AM 452

கொரோனா தொற்று காரணமாக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 7-ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்றுமுன் தினம் மாலை அவரின் உடல்நிலை திடீரென மோசமானது.

நேற்று காலையில் ஆபத்தான கட்டத்துக்கு அவரின் உடல்நிலை சென்றது. இயக்குநர் பாரதிராஜா நேற்று காலையில் மருத்துவமனைக்கு வந்து பாலசுப்பிரமணியத்தைப் பார்த்துவிட்டு, பிரார்த்தனை பலிக்கவில்லையே என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். பின்னர் மருத்துவமனைக்கு வந்த பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், அவரின் தந்தை காலமான தகவலை வெளியிட்டார். 51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.

அரசுத் தலைவர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரபலங்களும், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நேற்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட பாலசுப்பிரமணியத்தின் உடலானது, இரவு சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இன்று முற்பகல் 11 மணிக்கு அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கொரோனா சூழல் காரணமாக பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Comment

Successfully posted