தமிழ் சினிமாவின் புலமைப்பித்தன்!!...

Sep 08, 2021 12:55 PM 9248

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத ஆளுமையான புலவர் புலமைப்பித்தன், இன்று உடல்நலகுறைவால் காலமானார், அவருக்கு வயது 86. அவரது திரைப்பயணத்தின் சுருக்க வரலாற்றை இப்போது பார்ப்போம்...

1935ம் ஆண்டு கோவையில் பிறந்த புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி. தமிழ் புலமையில் பித்துக் கொண்டவராக காணப்பட்ட அவர், தனக்குத்தானே ‘புலமைப்பித்தன்’ என்று புனைபெயர் சூட்டிக்கொண்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெற்றி வாகை சூடிய ‘குடியிருந்த கோயில்’ படத்தின் மூலம், பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பின்னர் ‘அடிமைப் பெண்’ படத்தில் அவர் எழுதிய ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல், புலைமைப்பித்தனுக்கும், பாடகராக அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆரின் முத்திரைப் பாடல்களாக அறியப்படும், ‘நாளை உலகை ஆள வேண்டும்’, ‘நீங்க நல்லா இருக்கோணும்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அதோடு மட்டும் இல்லாமல், எம்.ஜி.ஆருக்கு அலாதியான பல காதல் பாடல்களையும் எழுதி ரசிகர்களை சொக்க வைத்தார்.

எம்.ஜி.ஆர் - புலமைப்பித்தன் நட்பு, திரைத்துறையையும் கடந்து அரசியலிலும் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. அதிமுகவின் தொடக்க காலத்தில், எம்.ஜி.ஆருடன் தோள்நின்ற புலமைப்பித்தனுக்கு, பின்னாளில் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவர், அரசவைக் கவிஞர் போன்ற சிறப்புகளும் கிடைக்கப் பெற்றன. இவர்கள் இருவருக்குமான நெருங்கிய நட்பை கண்டு வியக்காதவர்கள் இல்லை எனலாம்.

தமிழ் சினிமாவில் சிறந்த பாடலாசிரியராக பயணித்த புலமைப்பித்தன், இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். தான் விரும்பிய சித்தாந்தத்தின் பின்னணியில், புரட்சிகரமான பாடல் வரிகளை எழுதியதை விடவும், மனதை மயக்கும் மின்னல் தோரணங்களுக்கு சொந்தமான பாடல்களை எழுதியவர் அவர். பாடல்களில் புலமைப்பித்தன் ஆடும் வார்த்தை விளையாட்டுகளில், ஒரு தேர்ந்த ரசிகனை வெளிப்படுத்துவார்.

எம்.ஜி.ஆரின் காலக்கட்டத்தில் பொதுவுடமை தத்துவப் பாடல்களை எழுதிக்கொண்டிருந்த புலமைப்பித்தன், அதன்பின் காதல் பாடல்களை அதிகமாக எழுதினார். அதேநேரத்தில், வர்க்கப் பாகுபாடுகள் குறித்தும், மது ஒழிப்புக் குறித்தும் அவர் பாடல்கள் எழுதத் தவறவில்லை.

இன்னும் இதுபோல ஏராளமான பாடல்களை எழுதியுள்ள புலமைப்பித்தன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை என்பதே மறுக்கவே முடியாது. பொதுவுடமை சிந்தனைகளின் வழியே திராவிடத்தை ஆழமாக நேசித்த அவர், தனி ஈழம் அமைய வேண்டும் என்பதிலும் அதிக விருப்பம் கொண்டிருந்தார். சினிமா, அரசியல், பொதுவாழ்வு என, அனைத்திலும் நிறைவான பங்களிப்பை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறது நியூஸ் ஜெ...

Comment

Successfully posted