ஒன்றரை ஆண்டுக்கு பின் பள்ளிகள் திறப்பு; மாணவ, மாணவிகள் உற்சாகம்...

Sep 01, 2021 09:36 PM 879

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் புத்தகப் பையை சுமந்து கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வகுப்புக்கு 20 மாணவர்கள் என பாதுகாப்பு இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நஞ்சநாடு அரசு உயர் நிலைப்பள்ளியில், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். முகக்கவசம் அணியாத மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பு இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கு மாணவர்கள் ஆர்வமுடன் வந்தனர். மாணவர்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நெல்லையில் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் புனிதவளனார் மேல்நிலைப் பள்ளியில் புள்ளிங்கோவாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

கேரள மாநிலத்தில் தங்கியிருந்து நீலகிரி மாவட்டம் கூடலூரில், பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் வந்து செல்வதாகவும், எல்லையில் உரிய சோதனை செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அமரும் வகையில் வகுப்புகள் நடைபெற்றன.

திருச்செந்தூர் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது, வகுப்பறை மின் இணைப்பு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் பெரும்பாலான பள்ளிகள் சுகாதாரமற்ற விதத்தில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் மட்டும் ஆய்வு செய்ததாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் 3 நாட்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted