திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..

Jan 07, 2021 09:45 AM 18142

இந்திய சினிமாவின் திரைக்கதை சிற்பி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சி வரும் கே.பாக்கியராஜ் இன்று 71வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம் வெள்ளங்கோயிலில் ஒரு நடுத்தர குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறந்த பாக்யராஜ், 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பாக்கியராஜின் ஊசி முனையைப் போன்ற கூர்மையான வசனங்களால் கவரப்பட்ட பாரதிராஜா, அவரின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, புதிய வார்ப்புகள் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜுக்கு, தன் இயக்குநர் பயணத்தின் முழுமையான வெற்றியாக அவர் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப்படம் அமைந்தது. ”எண்ட காதலி உங்களுக்கு மனைவியாகிட்டு வரும், ஆனால் உங்கள் மனைவி எனக்கு காதலியாகிட்டு வராது” என கிளைமேக்ஸ் காட்சியில் பாக்யராஜ் பேசிய வசனம் படத்தின் சாரம்சமாய் அமைந்து கொண்டாட வைத்தது.

இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிபெற்றுக்கொண்டிருந்த பாக்யராஜுக்கு அவரின் நடனம் புது ஸ்டைலாக மாறியது. அதோடு மட்டுமல்லாமல், கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சனையால் கண்ணாடி அணிந்து நடித்ததும், அதை கழட்டி வைத்துவிட்டு சண்டைக்காட்சிகளில் நடித்ததும் அன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டானது.

குடும்ப உறவுகளையும், அது சார்ந்த சமூக பிரச்சனைகளையும் கையில் எடுத்துக்கொண்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் காட்சிகளையும் வசனங்களையும் அமைத்து, தமிழ் சினிமா ரசிகர்களின் இதய ஓட்டத்தோடு சீராக பயணித்தார் கே.பாக்யராஜ். முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சின்ன வீடு, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்திலுமே மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட கதாபாத்திரங்கள் கூட கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டு இருந்ததே இன்றைக்கும் அவருடைய படங்கள் கொண்டாடப்படுவதற்கு காரணம்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்பதைத்தாண்டி ஞானப்பழம், இது நம்ம ஆளு, பவுனு பவுனுதான் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பும் செய்துள்ளார். காட்சியை படமாக்கும் நுணுக்கத்தை பாரதிராஜாவிடம் கற்றுக்கொண்டு, தன் படங்களில் அவரின் சாயல் இல்லாமல், இயக்குநராகவும், நடிகராகவும் தனிச் சிறப்பு பெற்ற கே.பாக்யராஜுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Comment

Successfully posted