2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

Dec 30, 2019 06:36 PM 1233

தமிழகத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 4 ஆயிரத்து 924 ஊராட்சித் தலைவர் பதவிகள், 38 ஆயிரத்து 916 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகள் ஆகியவற்றுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 61 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருசில நிகழ்வுகளைத் தவிரப் பெரும்பாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Comment

Successfully posted