பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Jan 13, 2020 01:32 PM 420

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கிக்கு, பயிற்சி பெற வந்த வட மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த இளம்பெண், கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் பயிற்சி பெற கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி, இரவு ரயில் மூலம் கும்பகோணத்திற்கு வந்து இறங்கினார். பின்னர், தான் தங்கவுள்ள இடத்திற்கு ஆட்டோவில் சென்ற பொழுது, ஆட்டோ  திசை மாறி சென்றது. இதனையடுத்து, ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்ணை, நான்கு நபர்கள் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நவம்பர் 3-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து புகார் பெறப்பட்டு, 4ம் தேதி கும்பகோணம் மேற்கு  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்யப்பட்டது. அப்போது, நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ரமேஷ்குமாரின் தீவிர முயற்சியினால் அடுத்த சில தினங்களிலேயே தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன், வசந்த் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 14 மாதங்களுக்கு பிறகு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இயற்கை மரணம் அடையும் வரை, குற்றவாளிகள் 4 பேரும், சிறையிலேயே இருக்கும் படி, ஆயுள் தண்டனை விதித்தும், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Comment

Successfully posted