பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கற்களை வீசி தாக்கிய பொதுமக்கள்

Dec 02, 2019 06:41 AM 194

தெலுங்கானா மாநிலத்தில், அரசுப்பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிகள், சிறையிலிருந்து மாற்றப்பட்டபோது அங்கு குவிந்த பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு பெண் மருத்துவரான பிரியங்கா கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் பிரியங்காவின் இருசக்கர வாகனத்தை பஞ்சராக்கியுள்ளது. இதனையடுத்து அவருக்கு உதவுவது போல் நடித்த மர்ம நபர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, பிரியங்காவை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை எரித்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி முகமது அஷா, சிவா, சின்னகேசவலு, நவீன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் ஷாத் நகர் சிறையிலிருந்து, மெகபூப் நகர் சிறைக்கு மாற்ற பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் குற்றவாளிகள் அழைத்து வரப்பட்ட வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவில் கால தாமதம் செய்த காவல்துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரியங்கா ரெட்டி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்வதில், சம்பவம் நடந்த பகுதி எந்த காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியங்காவின் பெற்றோர் அழைகழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கால தாமதம் செய்த உதவி ஆய்வாளர் உள்பட 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted