"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" - சகோதரன் உள்பட 9 பேர் கைது

Jan 11, 2022 05:50 PM 4553

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால், பெரியம்மா குப்பு என்பவரின் ஆதரவில் இருந்துள்ளார்.

10ஆம் வகுப்பு வரை புதுச்சேரி பகுதியில் விடுதியில் தங்கி கல்வி பயின்ற அந்த மாணவி, பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தபடி, முட்டத்தூரில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவி கடந்த சில தினங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டதால் , பெரியம்மா குப்பு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குப்பு, சிறுமியின் நிலை குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் ஜோதி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெரியம்மா குப்புவின் மகன் மோகன், 77வயது முதியவர் வெங்கடேசன், இளையராஜா ஆகியோரை போக்சோவில் கைது செய்தனர்.

இதனிடையே சிறுமியை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் ஆகியோர் மாணவியிடம் செஞ்சி காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுமி விழுப்புரத்தில் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மாணவியிடம் செஞ்சி டிஎஸ்பி மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், பாபு, பிரபு மற்றும் சத்யராஜ் ஆகிய 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் திடீர் திருப்பமாக, புகார் அளித்த மாணவியின் பெரியம்மா குப்பு, மாணவியின் வன்கொடுமை குறித்து முன்பே தகவல் தெரிந்தும், மறைத்த குற்றத்திற்காக அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாக அதிகரிக்கும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில், குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையே இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comment

Successfully posted