ரத்த காயத்துடன் இறுதிவரை போராடிய ஷேன் வாட்சன்

May 14, 2019 06:36 AM 1938

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஷேன் வாட்சன் ரத்தக்காயத்துடன் விளையாடியதாகவும் போட்டி முடிந்தவுடன் அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னை அணியை சேர்ந்த ஷேன் வாட்சன் ரத்த காயத்துடன் இறுதி வரை போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்த நிலையில் அந்த அணியின் ஷேன் வாட்சன் மட்டும் இறுதிவரை களத்தில் இருந்து நம்பிக்கையுடன் ஆடினார். அவர் எடுத்த 80 ரன்களால் சென்னை அணி வெற்றி பெற்று விடும் என கடைசி வரை ரசிகர்கள் நம்பினார்கள்.

ஆனால் ஷேன் வட்சன் ரன் அவுட்டாகி விட, கடைசி ஓவரில் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை தோற்றது. இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக்காக போராடிய ஷேன் வாட்சன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் காயத்துடன் ஆடியதாக ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இந்த காயம் குறித்து அவர் யாரிடமும் கூறாமல் கடைசி வரை போராடியதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

வாட்சன் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது காயம் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த காயம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

போட்டி முடிந்தவுடன் இந்த காயத்துக்காக 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வாட்சன் காயத்துடன் ஆடிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Comment

Successfully posted