`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ - விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி

Jun 25, 2021 12:18 PM 1698

 கேரளாவில் விஸ்மயா என்ற மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார் அவரது தாய்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22வயதான விஸ்மயா மருத்துவம் பயின்று வந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, கிரண் குமார் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி 100 சவரன் நகை, ஒரு கார், ஒரு ஏக்கர் நிலத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர் விஸ்யமயாவின் பெற்றோர். இந்நிலையில், மேலும் வரதட்சணை கொடுக்க வலியுறுத்தி கிரண்குமார், விஸ்மயாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தலைமுடியை பிடித்து முகத்தில் அடிப்பது, கைகளில் ஆணியைக்கொண்டு சிராய்ப்பது, என பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவர், ஒரு கட்டத்துக்கு மேல் இந்த கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தங்களது மகளை பார்த்து 3 மாதங்களாகிவிட்டது என்கின்றனர் அவரது பெற்றோர். கடைசியாக தேர்வெழுத கல்லூரிக்கு சென்ற மகளை, கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் கணவன் கிரண் குமார். இந்நிலையில், ஜூன் 21ம் தேதி காலை விஸ்மயா குடும்பத்தினருக்கு போன்கால் வந்துள்ளது. அதில், `உங்கள் மகளின் உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூற, உடனே பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோருக்கு, `மகள் இறந்துவிட்டாள்’ என்ற செய்தி வந்து சேர்ந்தது. அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.


``என் மகளின் திருமணத்தையொட்டி, 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், டோயோட்டா கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தேன். இவ்வளவு செய்தும், நான் வாங்கி கொடுத்த காரின் மயிலேஜ் சரியில்லை என்று கூறி அதற்கு பதிலாக 10லட்சம் பணத்தை கேட்டு மகளை கொடுமைபடுத்தியுள்ளான் கிரண் குமார். சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கண்முன்னே எங்கள் மகளை அடித்தான்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் விஸ்மயாவின் தந்தை.

தாய் சஜிதா பேசுகையில், ``என் மகளை அவரது கணவன் அடிக்கடி அடித்து துன்புறுத்தியிருக்கிறான். கடந்தவாரம் கூட, விஸ்மயா தனது முகத்தில் அடிப்பட்ட காயத்தை போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். ஜீன் 20ம் தேதி என்னை தொடர்பு கொண்டு, தேர்வு கட்டணம் செலுத்த 5,500 பணம் வேண்டும் என்று கேட்டாள். `என்னிடம் பணமில்லை, உன் கணவரிடம் கேள்’ என்றேன். `பணம் கேட்டால், தனது கணவர் கத்துகிறார்’ என வேதனையுடன் தெரிவித்தாள் விஸ்மயா. அவள் பாத்ரூமிலிருந்துகொண்டு எனக்கு போன் செய்திருந்தாள். அதுமட்டுமில்லாமல், கணவன் கிரண் கடுமையாக முகத்தில் அடித்ததில், வாய் உடைந்து ரத்தம் வழிந்ததாகவும் அவள் கூறினாள். இங்கே நமது வீட்டுக்கு வந்துவிடு என்று அவளிடம் கூறினேன். அதற்கு அப்படி வந்துவிட்டாள் இந்த சமூகம் என்னைப்பற்றி தரக்குறைவாக பேசுமே என்று கூறிவிட்டு எல்லாவற்றையும் அவள்தாங்கிக்கொண்டாள்” என்று வேதனையுடன் கூறுகிறார் அந்த தாய்.

Comment

Successfully posted