"சினம் கொள்" திரைப்பட விமர்சனம்

Jan 17, 2022 04:00 PM 6338

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு, அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கைச் சூழலைப் பதிவு செய்யும் படமாக வெளிவந்துள்ளது ‘சினம் கொள்.' ஈழப் பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படமான இது Eelamplay OTTயில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் போர் முடிந்த பின்னர், சுமார் 8 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகிறார் முன்னாள் போராளியான அரவிந்தன் சிவஞானம்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும், தொலைந்துப் போன தனது மனைவியையும் மகளையும் தேடி பயணிக்கிறார். அவரது வீட்டையும் நிலங்களையும் ராணுவம் அபகரித்துக்கொள்ள, முன்னாள் போராளிகளான அவருடைய நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

அவர்களின் உதவியோடு தனது மனைவி, மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்குகிறார். புதிய நம்பிக்கையுடன்இருக்கும் அரவிந்தனைச் சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று அரங்கேறுகிறது.

அதில் இருந்து அவர் மீண்டு வருகிறாரா, இல்லையா? என்பதை வலி நிறைந்த இலங்கை தமிழர்களின் வாழ்க்கையின் வழியே சொல்கிறது ‘சினம் கொள்.’

இலங்கைத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே, பெரும்பாலும் ஆவணப்பட பாணியில் தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு ஜனரஞ்சகமான, அதேசமயம் அழுத்தமாக 'சினம் கொள்' படத்தை உருவாக்கி இருக்கிறார் ரஞ்சித் ஜோசப்.

முழுக்க முழுக்க இலங்கையிலேயே படமாக்கி இருப்பதால், இலங்கைத் தமிழர்களுடைய இயல்பு வாழ்க்கையை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காட்டியுள்ளார் இயக்குநர்.

படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழில் பேசினாலும், காட்சியமைப்பு, பாத்திரங்களின் நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்தும் அம்மக்களின் வலியை நம்முன் கடத்துகின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் பழனிகுமார் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு. கிளிநொச்சியையும் யாழ்ப்பாணத்தையும் நாம் இதுவரை பார்த்திராத கோணங்களில் மிக அழகாகவும், கவித்துவமாகவும் யதார்த்தமாக படைத்திருக்கிறார். பல இடங்களில் எளிமையான காட்சிகளைக் கூட பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இலங்கைத் தமிழராக நடித்திருந்த அரவிந்த் சிவஞானம் தான் இப்படத்தின் நாயகன் அமுதன். போராளிக்கான கம்பீரம், அன்பான அப்பா, பாசமான கணவன், தனது மக்களின் மீது அக்கறை மிகுந்தவன் என அமுதனாகவே வாழ்ந்திருக்கிறார். தமிழர்களின் அவலங்களையும் அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே ரசிகர்களுக்குக் கடத்துகிறார்.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, முன்னாள் போராளிகளாக நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனஞ்செயன் என அனைவருமே அவர்களது பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர்.

இலங்கைத் தமிழர் பற்றிய படம் என்றதும், சோக கீதம் வாசிக்காமல் காட்சிகளுக்கு எற்றார் போல சிறப்பாக பின்னணி இசை அமைத்திருக்கிறார் என்.ஆர். ரகுநந்தன். அருணாசலம் சிவலிங்கத்தின் எடிட்டிங் படத்தை தொய்வில்லாமல் கொண்டுச் செல்கிறது.

தீபச்செல்வனின் வசனங்களும், பாடல் வரிகளும் இலங்கை தமிழர்களின் வலியினை உணர்த்துகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பற்றியும் ஆங்காங்கே குறியீடுகளாக காட்சிகளை வைக்கத் தவறவில்லை.

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பிறகு அங்குள்ள தமிழர்களின் நிலையை உலகிற்கு சொல்லும் ஒரு பதிவாக இப்படம் உருவாகியுள்ளது. தனது இனத்தின் அடுத்த தலைமுறை மீது இயக்குநர் கொண்டிருக்கும் அக்கறை படத்தில் தெரிகிறது.

இலங்கை தமிழர்களின் வலியையும் வேதனைகளையும், தற்போதுள்ள சூழலையும் நேர்மையாக பதிவு செய்திருக்கும் ‘சினம் கொள்' நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படமே.


Comment

Successfully posted