படுக்கையறையில் ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்கள் உஷார்!

Jul 11, 2019 07:01 PM 117

வைஃபையில் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்பவர்கள் அதில் உள்ள கேமிரா மூலம் எந்தக் காட்சியையும் படப்பதிவு செய்யலாம். இதனால் படுக்கையறையில் ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் - இது குறித்து விரிவாகப் பார்ப்போம் இந்த எச்சரிக்கும் செய்தித் தொகுப்பில்…

படுக்கையறையில் ஸ்மார்ட் டிவியை வைத்திருப்பவரா நீங்கள்..? கவனம்…
இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு திருமணமான இளைஞர் தனது படுக்கையறையில் ஸ்மார்ட் டி.வி.யை பொருத்தி இருந்தார். வைஃபையில் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி மூலம் பாலியல் வலைத்தளங்களை பார்வையிடும் வழக்கமும் அவருக்கு இருந்தது. ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட பாலியல் வலைத் தளத்தை அவர் பார்க்கும் போது அதில் அவரும் அவரது மனைவியும் படுக்கையில் நெருக்கமாக உள்ள காட்சிகள் வீடியோவாக பதிவேற்றப்பட்டு இருந்தன. அதிர்ந்து போன அந்த இளைஞர் உடனே இணைய பாதுகாப்பு வல்லுநரான ராஜேஷ் என்பவரை தொடர்பு கொண்டார். இளைஞரின் படுக்கையறையில் எங்கு கேமரா உள்ளது என்று ராஜேஷ் அய்வு செய்த போதுதான், அங்குள்ள ஸ்மார்ட் டிவி ஹேக் செய்யப்பட்டுள்ளதை அவர் கண்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் முன்னர் பாலியல் இணையதளங்களை ஸ்மார்ட் டிவி மூலம் பார்த்த போது, பாலியல் இணையதள இணைப்பு மூலமாக நுழைந்த ஒரு ஹேக்கர் கணினியை ஹேக் செய்வதைப் போல, ஸ்மார்ட் டிவியையும் ஹேக் செய்துள்ளார். பின்னர் ஸ்மார்ட் டிவியில் உள்ள வைஃபை இணைப்பையும், கேமராவையும் வைத்து அங்கு நடக்கும் காட்சிகளை ஹேக்கர் அப்படியே தனது கணினியில் படப்பதிவும் செய்துள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், உரிய புகார்கள் மூலம் அந்தக் குறிப்பிட்ட காட்சி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனாலும் அந்த இளைஞர் இன்னும் உளவியல் பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கிறார். யார் அந்த ஹேக்கர்? - என்பதும், இன்னும் எத்தனை வீடியோக்கள் ஹேக்கரிடம் உள்ளன? - என்பதும் கண்டுபிடிக்கப்பட முடியாதவையாக உள்ளன.

ஸ்மார்ட் டிவிக்களும் கணினிகளைப் போன்றவைதான், அவற்றையும் ஹேக் செய்ய முடியும் - இதனால் அவற்றை தனிப்பட்ட உபயோகங்களுக்குப் பயன்படுத்துவதும், எப்போதும் இணைய இணைப்பில் வைப்பதும் தவறு. இதையே நமக்கு இந்த சம்பவம் உணர்த்துகிறது. நவீன யுகம் என்பது வசதிகளை மட்டுமல்ல சிக்கல்களையும் உள்ளடக்கியதுதான். எனவே வசதிகளை விரும்புபவர்கள் அதன் பின்னே உள்ள அபாயத்தையும் உணர்ந்து, எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது

Comment

Successfully posted