நாளை கரையை கடக்கும் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

May 25, 2021 07:22 AM 332

அதிதீவிர புயலாக மாறியுள்ள யாஸ், நாளை ஒடிஷா-மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை புயலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அதிதீவிர புயலாக மேலும் வலுவடைந்து, ஒடிஷாவின் பாராதீப்புக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கில், 420 கிலோமீட்டர் தொலைவிலும், பாலசோருக்கு 510 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, பாராதீப் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாகர் தீவுக்கு இடையே நாளை கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. 

யாஷ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 950-க்கும்மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 16 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடிமின்னலுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted