விண்வெளி தேவதை கல்பனா சாவ்லா!!

Jul 01, 2020 10:04 PM 723

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா பற்றி விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு..

விண்வெளி தேவதை கல்பனா சாவ்லா..

இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.பெயருக்கு தகுந்தார் போல் சிறுவயதிலேயே கல்பனாவுக்கு விமான ஓவியங்கள் வரைவது பொழுது போக்காக இருந்தது. விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் கல்பனாவும் ஒருவர்.

அன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே படித்து வந்த விமானப் பொறியியல் படிப்பை, பெற்றோரிடம் போராடி பெற்றார். கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை, 1982ல் அமெரிக்கா வரவேற்றது. 1984ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1994 ஆம் ஆண்டு நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சிப் பட்டியலில் இடம்பிடித்தார்.

1995ம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா, சக விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா, பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. 41 வயது கல்பனா, தேவதையாக விண்ணில் கலந்தார்.

இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர சாதனைகள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. கல்பனா கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.இன்றும் நம் வீட்டு குட்டி தேவைதைகள் பலருக்கு முன் உதாரணமாக இருந்துகிறார் விண்வெளி தேவதை கல்பனா சாவ்லா..

Comment

Successfully posted