தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதிகள் குறித்த சிறப்பு அம்சங்கள் -செய்தித் தொகுப்பு

Feb 15, 2020 07:13 AM 471

2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும், சிறப்பு அம்சங்கள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு 15 ஆயிரத்து 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டங்களுக்கு 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைய இருக்கும் 11 புதிய  மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு 1 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்காக 959 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ஆயிரத்து 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடனாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் பாசன திட்டத்திற்காக 6 ஆயிரத்து 991 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை 34 ஆயிரத்து 181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத் திட்டத்திற்காக மட்டும் 5 ஆயிரத்து 935 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக 966 கோடி ரூபாயும், பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகளுக்காக ஆயிரத்து 18 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் உயர்கல்வித்துறை பொறுத்தவரை இந்த நிதியாண்டு 5 ஆயிரத்து 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலை கழகங்களுக்கு 91 கோடியே 50 லட்சம் ரூபாய் தொகுப்பு மானியமாக வழங்கப்பட இருக்கிறது.

இதே போல் தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடி ரூபாயும், எரிசக்தி துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடி ரூபாயும், சமூக நலத்துறைக்கு 5 ஆயிரத்து 935 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகங்களுக்காக 18 ஆயிரத்து 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் ஊரக வளர்ச்சி துறைக்கு 23 ஆயிரத்து 161 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நிதியாண்டு பட்ஜெட் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது.

Comment

Successfully posted

Super User

தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் விவசாய நீர்வழி மேலாண்மை மற்றும் அணைகள் ஏரிகள் குளங்கள் வாய்க்கால்கள் தூர்வாருதல் புதிதாக அமைக்கும் பணிக்கு மிகஅதிகபட்ச முன்னுரிமை கொடுத்து மிக அதிக அளவு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள்