பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

Feb 19, 2020 06:46 PM 89

முதலமைச்சர் கோப்பைக்கான, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் கீழ், முதலமைச்சர் கோப்பைக்கான புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு பேட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன. இதில், நீச்சல், தடகளம், குத்துச்சண்டை, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகள் 12 வயது முதல் 16 வயது வரை, ஆண்-பெண் என இரு பிரிவுகளிலும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், தற்போது வெற்றி பெற்ற வீரர், வீராங்கானைகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகையிலை பட்டியில் புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து  600-க்கும் மேற்பட்ட காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர். காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், நெல்லை மாவட்ட அதிமுக சார்பில், பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 12 க்கும் மேற்பட்ட பள்ளிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்த  குற்றாலம் பராசக்தி கல்லூரிக்கு, வெற்றிக் கோப்பையும், 4 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

Comment

Successfully posted