இலங்கையில் உணவு பஞ்சம் ; அவசரநிலை பிரகடனம்

Sep 02, 2021 03:13 PM 4971

பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச, பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இலங்கையின் பிரதான வருவாய் துறையான சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது.

இதனால், வருவாயை இழந்து இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதுபோன்ற காரணங்களால், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் பண மதிப்பு 7 புள்ளி 5 சதவீதம் வரை சரிந்துள்ளது.

எனவே, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதற்காக, ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, நெல் போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted