வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்!

Nov 29, 2020 09:57 AM 1838

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்பட மூன்று மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தும், சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட நிலையில், புராரி பகுதியில், நிரங்கரி சமஹம் மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, டிராக்டர் டிராலிகளில் ஏற்றிக் கொண்டு, குடும்பத்துடன் டெல்லிக்கு விவசாயிகள் குடிபெயர்ந்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, விவசாயிகள் ஆடல், பாடலுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தில், முதலில் பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநில விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், டெல்லி காவல்துறையின் அனுமதியை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டெல்லி-ஹரியானா, டெல்லி- உத்தரபிரதேசம் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சாலைகள் மூடப்பட்டன.

குருசேத்திரம் அருகே விவசாயிகள் மீது காவல்துறையினர் வாகனம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தபோது, நவ்தீப் சிங் என்ற இளைஞர் துணிச்சலாக வாகனத்தின் மீது ஏறி தண்ணீர் பீய்ச்சுவதை நிறுத்தினார்.

இளைஞரின் துணிச்சலான செயல் இணையதளங்களில் பரவி பலரின் பாராட்டுக்கள் பெற்ற நிலையில், அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்தனர். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே, புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, தங்களது போராட்டங்கள் தொடரும் என மூன்று மாநில விவசாயிகளும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

Comment

Successfully posted