ஆலமரத்தின் மேலே ஆன்லைன் வகுப்பு!! என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு??

Jul 04, 2021 07:28 PM 3478

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆலமரத்தில் ஏறி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிபோன மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பெரப்பஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை சுற்றியுள்ள கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை என்பதால், சிக்னல் கிடைக்காமல் தவித்துபோன மாணவ, மாணவிகள், அங்குள்ள ஆலமரத்தின் கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பை கவனித்து வருகின்றனர்.

சரிவர சிக்னல் கிடைக்க வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் செல்ல வேண்டும். அதனால், உயிரை பணயம் வைத்து மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பில் கலந்துக் கொள்வதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடையின்றி ஆன்லைன் கல்வி பயில, தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted